Friday, March 16, 2007

பழக்கவழக்கம் - டாக்டர். திலகம் பழனிச்சாமி, அருள்மிகு பழனியாண்டவர் கலை-பண்பாட்டுக் கல்லூரி, பழநி .

பழக்கம் என்ற சொல் பழகுதல் அல்லது பயிற்சி யாதல் என்ற பொருளில் தமிழில் பண்டு தொட்டுப் பயின்று வந்துள்ளது. பழகு - பழகிய - பழகுதல் பழக்கம் என்ற சொல்லாட்சிகள் இன்றும் உள்ளன. பழகிப் போன செயல், பழக்கம் ஆகின்றது. பழக்கம் தனி மனிதச் செயற்பாடு. இதனைப் பிறரும் பின்பற்ற வாய்ப்புண்டு.
பழக்கம்
பழக்கம், வழக்கம், பழக்க வழக்கம் என்ற சொல்லாட்சிகள் தமிழரிடையே மிகுதியும் காணப் படுகின்றன.
தொல்காப்பியத்தில் பழக்கம் என்ற சொல்லாட்சி இல்லையாயினும், அப்பொருள் தரக்கூடிய பல சொற்கள் காணப் பெறுகின்றன. 'பழகிய' (தொல்.நூ. 682) என்ற சொல்லாட்சி உண்டு.
''பழக்கம் என்பது ஒரு கற்கும் செயலாகும். இது தனி மனிதனிடம் இயல்பாக வந்தமைந்த நடத்தையைக் குறிப்பதாகும். பழக்கம் வளர்ச்சிக்கு இன்றியமையாத கூறாகக் கருதப் படுகிறது." என்று விளக்குகிறார் க.காந்தி.
''நனவுடன் தொடங்கிய செயல் நாளடைவில் நனவன்றியே அதாவது மூளையின் பிரதானப் பகுதிகளின் சம்பந்தமின்றியே நிகழ்வதாக ஆகிவிடுகின்றது.அப்படி நிகழும் செயலே பழக்கம் எனப்படும்" என்று கலைக்களஞ்சியம் கூறும்.
எந்த ஒரு பழக்கமும் முதலில் தனி மனிதனிடம்தான் தோன்றுகிறது. அதுஇயல்பாகவோ, தூண்டுதலி னாலோ நிகழக்கூடும். பழக்கம் என்பது நல்லதாகவும்இருக்கும், தீயதாகவும் இருக்கும். அதனால்தான் நற்பழக்கம், தீப்பழக்கம் என்ற சொல்லாட்சிகள் ஏற்பட்டன. சமுதாயத்தின் உருவாக்கத்தில் இப்பக்கம் தான்அடிப்படையாக அமைகின்றது.ஒத்த பழக்க முடையவர்கள் ஒன்று சேர்ந்து வாழ்தலே சமுதாயத்தின் தோற்றம் ஆகும்.
சமுதாயங்கள் பலவாகப் பெருகியமைக்கு அடிப்படைக் காரணம் பழக்கமே.
இத்தகைய பழக்கங்கள் இளமை முதலே தொடங்கி வருவன. நல்ல பழக்கங்களை இளமையில் குழந்தை களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கமே பெற்றோர் ஆசிரியரின் கடமை என்று கல்வி ஆராய்ச்சியாளர்களால் வலியுறுத்தப் பெறுகின்றது. மேலும் நல்ல பழக்கங்களை அமைத்துக் கொள்ள குழந்தைப் பருவமே ஏற்றது என்பது உளவியலாரின் கருத்து.
வழக்கம்
பழக்கம் - வழக்கம் என்றாகி இருத்தல் வேண்டும். பழக்கத்தின் தொடர்ந்த நிலையே வழக்கம் ஆகும். 'சமூகத்தில் அதிகமாகப் பின் பற்றப்படும் பழக்கமான நடவடிக்கையே வழக்கம்ஆகும்... வழக்கங்கள் ஒரு குழுவினுடைய விருப்பங்கள், இலட்சியங்கள், வாழ்க்கைக் கண்ணோட்டங்களால் பிரதி பலிப்பதாகவும் அமைகின்றன' என்று குறிப்பிட்டுள்ளார் க. காந்தி.
இதனையடுத்து, ''ஒரு இனக் குழுவிலுள்ள பலருடைய மனவெழுச்சி, உணர்ச்சி,விருப்பு, வெறுப்பு ஆகியவற்றுடன் இணைந்து நிற்பது வழக்கம் என்று கருதப்படுகிறது" என்றும் குறிப்பிடுவார்.
வழக்கம் என்ற சொல்லாட்சி தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளமை அதன்பழமையைச் சுட்டுவதாகும்.
''தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும்
பகுதிக் கிளவி வரைநிலை இலவே." -(தொல்.நூ.500)''
முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை" -(தொல்.நூ.980)
''வல்லெழுத்து மிகினும் மான மில்லை
ஒல்வழி யறிதல் வழக்கத் தான" -(தொல்.நூ.246)''
அக்கென் சாரியை பெறுதலும் உரித்தே
தக்கவழி அறிதல் வழக்கத் தான" -(தொல்.நூ.270)
''சொல்வழி அறிதல் வழக்கத்தான்" -(தொல்.நூ.312)
''சேய்மையின் இசைக்கும் வழக்கத்தான" -(தொல்.நூ.637)''
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்" -(தொல்.நூ.999)
தொல்காப்பியர் வழக்காறு என்ற சொல்லையும் கையாண்டுள்ளார்.
''வழக்காறல்ல செய்யு ளாறே" -(தொல்.நூ.501)
மக்களிடையே தொன்று தொட்டு வழங்கி வருவது வழக்கம் ஆகும்.
வழக்கு என்பது அக்காலத்தில் நன்னெறி என்ற பொருளில் வழங்கியது.
இதனையே வள்ளுவரும்,
''அன்பொ டியைந்தவழக்கென்ப ஆரயிர்க்
கென்போ டியைந்த தொடர்பு"
என்று கூறியுள்ளார்.
''எண்பதத்தா லெய்த லெளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
"பரிமேலழகரும் வழக்கு என்பதை நன்னெறி என்றே கூறியுள்ளார்.
பழக்க வழக்கம்
பழக்க வழக்கம் - இருசொற்கலப்பாகும். பழக்க வழக்கங்களைத் தனி மனிதனும், சமுதாயம் என்ற அமைப்பும் இணைந்து உருவாக்குகின்றன. சமுதாயம் என்ற அமைப்பு. ஒன்றைக் குறிப்பதன்று. ஒத்த கருத்துடைய பழக்கங்களை மேற்கொள்வாரின் கூட்டமைப்பே சமுதாயமாகும். மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டே பழக்கம் உருவாகின்றது. சமுதாயத்தில் அவைஏற்றுக்கொள்ளப்படுகின்ற நிலையில் வழக்கங்களாக உருவாகின்றன.
''தனி மனிதனிடம் இயல்பாக வந்தமைந்த நடத்தையைப் பழக்கம் எனவும் இனக்குழுவிலுள்ள பலருடைய மனவெழுச்சி உணர்ச்சி ஆகியவற்றுடன் இயைந்து நிற்பது வழக்கம் எனவும் சமூகவியலார் கூறுவர்". இக்கூற்று ஏற்புடையதாகும்.
'தனி மனிதன் பழகிப் போன முறையில் திரும்பத் திரும்பச் செய்துவரும் ஒரு குறிப்பிட்ட செயலைப் பல மனிதர் ஒன்றாகச் சேர்ந்து செய்கின்ற பொழுது அதுவழக்கம் எனப் போற்றப்படுகின்றது, என்பர் க.த. திருநாவுக்கரசு.
'பழக்கம் என்பது தனிமனிதனைச் சார்ந்த தொடக்கநிலை எனவும் வழக்கம் என்பதுசமுதாயம் சார்ந்த தொடர்நிலை எனவும் கூறலாம்' என்பர் க. காந்தி.
பழக்க வழக்கம் ஒவ்வொரு இனக்குழுவிற்கும் சமுதாயத்திற்கும் தனிப்பட்டமுறையில் அமைவதைக் காண முடிகிறது. ஒரே ஊரில் வாழ்கின்ற வேளாளக் கவுண்டர்களின் பழக்க வழக்கங்களும், அக முடையார் பழக்க வழக்கங்களும் ஒன்றாக அமையாமல் வெவ்வேறாக அமைந்துள்ளன.
பழக்க வழக்கம் என்ற சொல் இன்று சமுதாயச் செயற்பாட்டு நிலைகளை விளக்கவல்லதாகவே பயன்பட்டு வருகின்றது.
மரபு
மரபு என்பது பழக்க வழக்கத்தோடு தொடர்புடையது;
அதனின்றும் உருவானது என்று கூறப் பெறும்.
பழக்க வழக்கங்களைப் பற்றி அறியுங்காலை,
மரபைப் பற்றிய விளக்கத்தை அறிவதும் இன்றியமையாதது ஆகும்.
தொல்காப்பியர்
நூன்மரபு,
தொகை மரபு,
விளிமரபு
என்று சில இயல்களைஅமைத்ததோடன்றி,
மரபியல் என்றே ஓரியல் வகுத்துள்ளார் எனின் மரபின்சிறப்பும் இன்றியமையாமையும் புலனாகும்.
மரபு என்பதற்குத் தெளிவானவிளக்கத்தைத் தொல்காப்பியர் அளிக்கவில்லை.
ஆனால் மரபு என்பதற்குப் பலஇடங்களிலும் விளக்கம் தந்துள்ளார்.
உரையாசிரியர்களும், திறனாய்வாளர்களும்மரபு என்பதற்குப் பல்வேறு விளக்கங்கள் தந்துள்ளனர்.
அரசஞ்சண்முகனார்,''மரபு என்பது தொன்று தொட்டு வந்த வழக்கு" என்பர்.
''மரபு என்பது ஒவ்வொரு பொருளுக்கும் ஆன்றோர் வழங்கிய சொற்களை அவர்கள்வழங்கிய முறைப்படியே கூறுதல் ஆகும்" என்று தொல்காப்பியச் செல்வம் சுட்டும்.
ச. வையாபுரிப்பிள்ளை, ''ஓர் இனத்தார் ஒரு பொருள் பற்றி வழக்கமாய் அனுசரித்து வரும் நியதியே மரபு என்பது ஆகும்" என்பர்.
பழக்கத்தின் காரணமாக வழக்கம் ஏற்பட்டு அதிலிருந்து மரபாக நிலைபெறுகின்றது என்று ச.வே. சுப்பிரமணியம் மொழிவர்.
நன்னூலார்,''எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர்செப்பினர் அப்படிச் செப்புதல் மரபு"என்று விளக்கம் தந்துள்ளார்.
மரபு மாறக்கூடியதன்று.
தொன்று தொட்டு வழக்கத்தின் காரணமாக வருவது.
''மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும்"என்று கூறுவர் தொல்காப்பியர்.
பழக்க வழக்கங்கள் ஒரு குழுவினரிடையே பலவாறாக அமைதல் போலவே ஒரு குழுவினரிடையே பல்வேறு மரபுகளும் காணப்பெறும்.''பழக்கம், வழக்கம், மரபு என்ற சொற்கள் ஒன்றோடொன்று உறவுடையன. ஒன்றின் வளர்ச்சி நிலையே மற்றொன்றின் தொடர்ச்சியாக அமைகின்றது.
பழக்க, வழக்க,மரபுகள் எளிதில்மாற்ற முடியாதவை. அவை கால, இட, சூழ்நிலை அமைவுகளுக்குத்தக உருப்பெறுவன. அவ்வாறு உருப்பெறும் மரபுகளே சமுதாய நியதிகளாகக் கருதப் படுகின்றன. எனவே, பழக்கம் என்பது தனிமனிதனைச் சார்ந்தது என்றும்,வழக்கம் சமுதாயத்தைச் சார்ந்ததென்றும், மரபு சமுதாயம் விதிக்கும் கட்டுப்பாடு எனவும் கூறலாம்.
மேலும் பழக்கம் என்பது தொடக்க நிலையாகவும், வழக்கம் தொடர் நிலையாகவும், மரபு பண்பாட்டின் முதிர்நிலை எனவும் வகைப் படுத்தலாம். தனிமனிதப் பழக்கங்களே காலப் போக்கில் சமுதாய வழக்கங்களாக உருப்பெற்றுத் தலைமுறை தலைமுறையாக இடையறாது நிலைத்து வாழ்வு பெறும் நிலையில் மரபுகளாக வாழ்வு பெறுகின்றன" என்று க.காந்தி அளித்துள்ள விளக்கம் சிறப்பாகவும் ஏற்புடையதாகவும் அமைகின்றது.
தொல்காப்பியர், தலைவன் பொருள் தேடக் கடல் கடந்து செல்லுங்கால் தலைவியைஉடன் அழைத்துச் செல்லும் வழக்கம் இல்லை என்று கூறியுள்ளார்.
''முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை." (தொல்.நூ.980)
தொல்காப்பியர் - வழக்கம் என்றே சுட்டுகின்றார்.
பின்னாளில் அதுவே சமுதாயநியதியாக, மரபாக மாறிவிட்டது.
வழக்கம் மரபாகின்றது என்பதற்கு இஃது ஒருசிறந்த எடுத்துக்காட்டாகும்.
பழக்க வழக்கங்களும் சடங்குகளும் பழக்க வழக்கங்கள் போலவே சடங்குகளும் சமுதாயத்தோடு தொடர்புடையன. சடங்கு என்ற சொல்லாட்சி, தொல்காப்பியத்திலோ, சங்க இலக்கியங்களிலோ இடம் பெறவில்லை.
தொல்காப்பியர், 'கரணம்' என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தியுள்ளார். சடங்கின் முன்னோடிச் சொல்லே கரணம் என்பது.
தொல்காப்பியர்,
''பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப"
''கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே"
என்று சுட்டியுள்ளார்.
இந்நூற்பாக்கள் கற்பியலில் வருவதால் திருமணச் சடங்குகள் சுட்டப்பெற்றனஎனக்கொள்வர்.
முதல் நூற்பாவினைப் பொதுவாகக் கொள்வதில் தவறில்லை. நாட்டில்பொய்யும் வழுவும் தோன்றியதால், சமுதாய வாழ்வு சீர்குலையக் கண்ட சான்றோர்கள் நேர்மையுவு கட்டுப்பாடும் கொண்ட சமுதாயத்தை உருவாக்க வேண்டி சடங்குகளைத் தோற்றுவித்தனர் எனக் கொள்வதே பொருந்தும்.
திருமணத்தில் சடங்குகள் முறைப்படி, கிழவன் கிழத்தியைத் திருமணம் செய்து கொண்டது அடுத்த நூற்பாவால் புலனாகின்றது. திருமணத்தில் கிழத்தியை அவர்தம் பெற்றோர் கொடுப்பது மரபு. இதனைக் கொடைக்குரி மரபினோர் என்ற சொல்லாட்சி உணர்த்தும்.
''பழக்கம் என்பது பயிற்சியின் முதிர்ச்சி... உயர்ந்தோர் பழக்கங்கள் காலப்போக்கில் வழக்கங்கள் என்று பெயர் பெறுகின்றன."
''ஒரு செயல் நன்மை விளைவிக்கின்றது என்று மக்கள் உணரும் நிலையில் அதுபழக்கமாக மாறுகிறது. காலப் போக்கில் வழக்கங்கள் என்று பெயர் பெறுகின்றன.''
''ஒரு செயல் நன்மை விளைவிக்கின்றது என்று மக்கள் உணரும் நிலையில் அதுபழக்கமாக மாறுகிறது. காலப்போக்கில் அறிவியல், கல்வி ஆகியவை காரணமாகச் சமுதாயத்தில் முன்னேற்றம் ஏற்படும் போது அது சடங்காக மட்டும் நிற்கிறது."
''செயல், பழக்கம், சடங்கு மூன்றும் வெவ்வேறு வளர்ச்சிப் படியிலுள்ள ஒரே செய்தியாகும்"
என்று வி.சரசுவதி அவர்கள் கூறும் கருத்து முற்றிலும் பொருத்தமானதே ஆகும்.
பழக்க வழக்கங்கள் தொடக்கத்தில் வரன் முறையின்றி அமைய வாய்ப்புண்டு.பின்னர் தேவை ஏற்படும் பொழுது சட்டதிட்டத்துடன் வரன் முறைப்படுத்துங்கால் அவை சடங்காக மாறுகின்றன.
திருமணத்தில் பெண் பார்த்தல் என்பது ஒரு மரபு.
பெண் பார்க்கச் செல்லும்போது இத்தனை பேர் செல்ல வேண்டும், இன்ன இன்ன பொருட்களை எடுத்துச்செல்ல வேண்டும் என்று நெறிப்படுத்தும் போது அதுவே சடங்காக ஆகின்றது. இதைப்போன்றே ஒவ்வொரு நிகழ்விலும் தொடர்புடைய சடங்குகள் தோற்றம் பெற்றன.
''இயற்கையின் சீற்றங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள நினைத்த அவன்(மனிதன்) இப்படிச் செய்தால் இவ்வாறு நடக்கும் என்று எண்ணிக் கற்பித்துக் கொண்ட செயல்முறைகள் சடங்குகளாகத் தோற்றம் கொண்டன" என்று சடங்குகளின் தோற்றத்திற்குக் கூறும் காரணம் பொருந்துவதாக இல்லை.
ஏனெனில்இன்று இயற்கையின் சீற்றம் இன்றியே இயல்பான வாழ்க்கையிலேயே சடங்குகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
''மனித இனத்தை ஒன்றுபடுத்தி மகிழ்ச்சியில் திளைக்க வைப்பதே விழாக்களின் செயற்பாடாகும். அவை சடங்குகளின் அடிப்படையில் தோன்றி சமுதாய நம்பிக்கையின் காரணமாகச் செல்வாக்குப் பெற்று வளர்ந்தும் வாழ்ந்தும் மறுமலர்ச்சியடைந்தும் மக்களினங்களிடையே தொன்று தொட்டு நிலவி வருகின்றன.விழாக்கள் எனபன மக்கள் ஒன்று சேர்ந்து நடத்தும் கூட்டுச் சடங்குகளிலிருந்து தோன்றியனவாகவே காட்சி தருகின்றன. சடங்குகளே விழாக்களுக்கு அடிப்படை. சடங்குகளின் ஒன்றிணைக்கப் பட்டகூட்டுத் தொகுதியினை விழா எனக் கூறலாம்" என்று கருத்து கூறுகிறார் க.காந்தி.
இவரின் கூற்று முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதன்று. இறைவன் தொடர்பான விழாக்கள் மாதந்தோறும், ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு விழாவிற்கும் வரை யறுக்கப்பட்ட விதிமுறைகள் பின்பற்றப் படுகின்றன. இவற்றை வழிபாட்டு முறைகள் என்று கூறுவார்களே தவிர, சடங்குகள் என்று கூற மாட்டார்கள்.
இல்லங்களில் நடைபெறும் விழாக்களில்பின்பற்றப்படும் நடைமுறைக்குச் சடங்கு என்று பெயர். ''சடங்குகள் என்பதற்கு நற்செயல்கள் என்று பொருள் சொல்லலாம். இச்சடங்குமுறையானது, சங்க காலத்திலேயே இருந்தது. அந்தக் காலத்தில் இச்சடங்குகளைக்கருத்துணர்வோடு, பொருட்செறிவோடு நற்பயன் கருதித்தான் அமைத்தனர். நம்முன்னோர்கள் அறிவுப்பூர்வமாகத்தான் எதையும் மேற்கொண்டு இருந்தனர். இதன்உண்மை நிலையை அறியாமல் தான் நம்மில் சிலர் மூடப்பழக்கம் எனக் கைவிட்டனர்"என்று கருத்துரைப்பர் தே.ப.சின்னச்சாமி.
சடங்குகள் சமுதாயத்திற்குச் சமுதாயம் வேறுபட்டுக் காணப்பெறும். சடங்குஒன்றாக இருக்கலாம். செய்யும் முறை வேறாக இருத்தல் கூடும். பழக்கவழக்கங்களைப் போலவே சடங்குகளும் பலவகை யானவை; இனத்திற்கு இனம் மாறுபட்டு இருப்பவையும்கூட. நம்பிக்கைகள்ஒரு சமுதாயத்தில் மக்களிடையே காணப்பெறும் நம்பிக்கைகள் கருதத்தக்கன. சமூகத்தின் பண்பாட்டு மரபினை அறிவிக்க வல்லன. அச்சமுதாயத்தின் நம்பிக்கைகள் தோற்றம் பெற்றன.
திருமணம் பேசச் செல்லும் முன்னர், கோவிலில் பூப்போட்டுப் பார்த்தல் இன்றும் மக்களிடையே ஒரு வழக்கமாக இருந்து வருகின்றது. இன்ன பூ விழுந்தால் காரியம் கைகூடும்; இன்ன பூ விழுந்தால் காரியம் கைகூடாது என்று மக்கள் நம்புகின்றனர். நிமித்தம் பார்த்தலும் நம்பிக்கைகள் தோன்றுவதற்குக் காரணமாகின்றன. பூப்போட்டுப் பார்த்தல் என்பது நாமாகவே கோவிலுக்குச் சென்று இறைவனிடம் வேண்டிக் கேட்பதாகும். மற்றும் பல்லிகள், பறவைகள், விலங்குகள் இவற்றின் ஒலிகளும் நிமித்தங்களாகக் கருதப்படுகின்றன.
''கள்ளி முள்ளரைப் பொருந்திச் செல்லுநர்க்கு உறுவது கூறுஞ் சிறுசெந் நாவின்மணியோர்த் தன்ன தெண்குரற்கணிவாய்ப் பல்லிய காடிறந் தோரே"
பல்லியின் ஒலிப்பு இங்கு நன்னிமித்தமாகக் கருதப்பெற்றது.
நல்லது நிகழும்என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர்.
பழக்க வழக்கங்கள், மரபுகள், சடங்குகள், நிமித்தங்கள், நம்பிக்கைகள்முதலியன சமுதாயத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தும் வாயில்களாக அமைந்தன. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இவை தனித்தன்மை உடையனவாக விளங்குகின்றன.

Monday, March 5, 2007

தமிழிலேயே சாப்பிடலாம்! - கரு.திருவரசு.

சாப்பாடு எனும் சொல் புதிராக இருக்கிறது.
`````````````````````````````````````````
இது தமிழ்ச் சொல்லா? பழந்தமிழ் இலக்கியத்தில் இச்சொல் இருக்கிறதா? எனப் பல கேள்விகளை ஒரே நேரத்தில் கேட்டார் ஒரு நண்பர்.
`
சாப்பாட்டுக்குத் தமிழில் உணவு, உண்டி, அடிசில் எனப் பல சொற்கள் இருக்கின்றன.
`
சாப்பாடு எனும் சொல்லுக்கு வேர்ச்சொல் விளக்கம், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் "முதல் தாய்மொழி" எனும் நூலில் ஒப்பொலிப்படலம் எனும் பகுதியில் பின் வருமாறு விளக்குகிறார்.
`
"இருதிணைப் பொருள்களும் இயற்கையாகவும் செயற்கையாகவும் பிறப்பிக்கும் ஒலிகளைப் போன்ற ஒலிக் குறிப்புகளும் அவற்றை அடிப்படையாகக் கொண்ட சொற்களும் ஒப்பொலிச் சொற்களாம். உயர்திணையொலிகள்.
`
எடுத்துக்காட்டு:
`
ஒலிக் குறிப்பு, சப்(பு). சொல் சப்பு - சப்பிடு - சாப்பிடு - (சாப்பீடு) சாப்பாடு."அவர் கூற்றை உறுதிப் படுத்துமாப் போல உண்ணல் ஐந்து வகை எனச் சொல்லும் சூடாமணி நிகண்டு,
`
"பல்லினால் கடித்தல் நக்கல் பருகல் விழுங்கல் மற்றும் மெல்லவே சுவைத்தலாகும் வினவில்ஐந் துணவு தாமே" எனும் செய்யுள் வழி உண்ணல் வகையில் கடித்துண்பது, நக்கியுண்பது, பருகியுண்பது, விழுங்கியுண்பது, சப்பியுண்பது என விளக்குகிறது.
`
சப்பிடு - சாப்பிடு - சாப்பாடு. மேற்காணும் விளக்கங்களைப் பின்வரும் அகரமுதலிகள் தரும் சொல் பொருள்களும் பிற செய்திகளும் பெரிதும் உறுதிப் படுத்துகின்றன.
`
அகரமுதலிப் பொருள்:
`
சப்புதல் - மெல்லுதல், குதப்புதல், உறிஞ்சிக் குடித்தல்.
`
சப்பிக் கொடுத்தல் - வாயிலிட்டுப் பதப்படுத்திக் குழந்தைக்குக் கொடுத்தல்.
`
சப்பெனல் - சாரமின்மைக் குறிப்பு, உப்பில்லாப் பண்டம் சப்பென்றிருக்கும்.
`
சப்புக் கொட்டுதல் - சாப்பிட்டபின் சுவையை நினைத்து நாக்கை மேல் அண்ணத்தோடு ஒட்டி ஒலி எழுப்புதல்.
`
உணவு உட்கொள்ளும் வகைகள் என்று இருபத்தைந்துக்கு மேற்பட்ட சொற்கள் தமிழில் உள்ளன எனக் குறிப்பிடும் திரு.இரா.வேங்கடகிருட்டிணன் (நூல்: தமிழே முதன்மொழி) தரும் குறிப்பில் "சப்புதல்" எனும் சொல்லையும் தருகிறார்.
`
மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் தம் "சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்" எனும் நூலில் உணவுண்ணுதற்கான 29 வகைச் சொற்களைத் தந்து பொருள் விளக்கமும் தருகின்றார்.
`
1. அசைத்தல் - விலங்குபோல் அசையிட்டடுத் தின்னுதல்
2. அதுக்குதல் - சூடான உணவை வாயின் இருபுறத்திலும் மாறிமாறி ஒதுக்குதல்
3. அரித்தல் - பூச்சி புழுப்போலச் சிறிது சிறிதாய்க் கடித்தல்
4. அருந்துதல் - சிறிது சிறிதாய்த் தின்னுதல் அல்லது குடித்தல்
5. ஆர்தல் - வயிறு நிரம்ப உண்ணுதல்
6. உண்ணுதல் - எதையும் உட்கொள்ளுதல்
7. உதப்புதல் (குதப்புதல்) - வாயினின்று வெளிவரும்படி மிகுதியாய்ச் சுவைத்தல்
8. உறிஞ்சுதல் - ஒன்றிலுள்ள நீரை வாயால் உள்ளிழுத்தல்
9. ஒதுக்குதல் - ஒரு கன்னத்தில் அடக்குதல்
10 கடித்தல் - கடினமானதைப் பல்லால் உடைத்தல்
11 கரும்புதல் - ஒரு பொருளின் ஓரத்தில் சிறிது சிறிதாய்க் கடித்தல்
12 கறித்தல் - மெல்லக் கடித்தல்
13 குடித்தல் - கலத்திலுள்ள நீரைப் பொதுவகையில் வாயிலிட்டு உட்கொள்ளுதல்
14 குதட்டுதல் - கால்நடைபோல் அசையிட்டு வாய்க்கு வெளியே தள்ளுதல்
15 கொறித்தல் - ஒவ்வொரு கூலமணியாய்ப் பல்லிடை வைத்து உமியைப் போக்குதல்
16 சப்புதல் - சவைத்து ஒன்றன் சாற்றை உட்கொள்ளுதல்
17 சவைத்தல் - வெற்றிலை புகையிலை முதலியவற்றை மெல்லுதல்
18 சாப்பிடுதல் - சோறுண்ணுதல்
19 சுவைத்தல் - ஒன்றன் சுவையை நுகர்தல்
20 சூப்புதல் - கடினமானதைச் சப்புதல்
21 தின்னுதல் - மென்று உட்கொள்ளுதல்
22 நக்குதல் - நாவினால் தொடுதல்
23 பருகுதல் - கையினால் ஆவலோடு அள்ளிக் குடித்தல்
24 மாந்துதல் - ஒரே விடுக்கில் அல்லது பெருமடக்காய்க் குடித்தல்
25 முக்குதல் அல்லது மொக்குதல் - வாய் நிறைய ஒன்றையிட்டுத் தின்னுதல்
26 மெல்லுதல் - பல்லால் அரைத்தல்
27 மேய்தல் - மேலாகப் புல்லைத் தின்னுதல்
28 விழுங்குதல் - மெல்லாமலும் பல்லிற் படாமலும் விரைந்து உட்கொள்ளுதல்
29 மிசைதல் - மிச்சில் உண்ணுதல்
`
நாம் பெருந் தீனிக்காரனைச் சாப்பாட்டு ராமன் என்று சொல்கிறோம்.
தெலுங்கு மொழியிலும் இது சாப்பாட்டு ராமுடு என வழங்குகிறதாம்.
`
தமிழில் நிலைமொழிக்கு முன்னால் ஒரு பிறமொழிச் சொல்லை வருமொழியாகக் கொண்டு புணரியல் விதிப்படி இணைக்கலாமா, முடியுமா? என்பதற்குக் காட்டுகள் தந்து விளக்கம் தரும் மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் சாப்பாடு என்பதைத் தமிழ்ச் சொல்லாகவே காட்டுகிறார்.
`
அவர் தந்த காட்டுகள்:
`
அவர் + ரவை வாங்கினார். சாப்பாடு + ரெடி.
`
புலவர் இரா.இளங்குமரன் தொகுத்த வழக்குச்சொல் அகராதியில் "சாப்பாடு போடல்" என்பதைப் பின்வருமாறு விளக்குகிறார்.
`
"நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் திருமண அகவை உடையவர்களெனின், என்ன, எப்பொழுது சாப்பாடு போட எண்ணம், போகிற போக்கைப் பார்த்தால் சாப்பாடு போடும் எண்ணமே இல்லையா? என வினவும் சாப்பாடு திருமணப் பொருட்டதாம்.
`
திருமணம் என்றாலே பலவகைக் கறிகள், பாயசம், அப்பளம், வடையுடன் சாப்பாட்டுச் சிறப்பே பெருஞ் சிறப்பாகப் பேசப்படுவதாகலின் சாப்பாடே திருமணப் பொருள் தருவதாயிற்று.
`
தாலிகட்டு முடிந்தால் இலை முன்னர்தான் பலரைப் பார்க்கலாம்.
`
அவ்வளவு பாடு, சாப்பாடு. பழந்தமிழ் இலக்கியத்தில் இந்தச் சொல் இருக்கிறதா?இருப்பதாகத் தெரியவில்லை.
`
என்றாலும் இக்கேள்வி தொடர்பாக இங்கே நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய செய்திகள்.
`
1. நம் இலக்கிய நூல்கள் அனைத்தும் இப்போது நம்மிடம் இல்லை.
`
"மறைந்து போன தமிழ் நூல்கள்" எனத் திரு. மயிலை சீனி வேங்கடசாமி 338 பக்கங்கள் கொண்ட ஓர் ஆய்வு நூலே எழுதியுள்ளார்.

அதில் 314 மறைந்து போன தமிழ் நூல்களின் விவரம் தருகிறார்.

சிதைவுண்ட நூல்களென மேலும் 319 நூல்களைக் குறிப்பிடுகிறார்.
`
2. இருக்கும் எல்லா நூல்களுக்கும் சொல்லடைவு தொகுக்கப்படவில்லை.
`
எனவே, பழந்தமிழ் இலக்கியத்தில் இருந்தால் தான் அது தமிழ்ச் சொல் என ஏற்றுக் கொள்ளலாம் என்பது முறையல்ல.
`
நாராயண பாரதியார் என்பார் எழுதி 1905ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட "திருவேங்கட சதகம்" எனும் நூலில், "நல்வண்ண மென்னிலொரு சாப்பாடு" என வரும் பாடலடியில் "சாப்பாடு" கிடைக்கிறது.
`
முக்கனியும் சர்க்கரையும் மொய்ம்மலர் போல் தோசைகளும் தக்க மிளகாய்ப் பொடியும் சட்டினியும் - பக்குவமாய்ச்சாப்பிடுங்கள் சாப்பிடுங்கள் என்று கிருஷ்ணசாமி தந்த காப்பிக்கும் உண்டோ கணக்கு எனத் தனிப்பாடல் திரட்டில் வரும் ஒரு வெண்பாவில் புலவர் வே.முத்துசாமி என்பார் சாப்பிடுங்கள், சாப்பிடுங்கள் என்கிறார்.
`
சாப்பாடு எனும் சொல் வழங்கும் சில பழமொழிகள்:
`
1 அன்று சாப்பிட்ட சாப்பாடு இன்னும் ஆறு மாதத்திற்குத் தாங்கும்.
2 கோட்டுச் சம்பா ஆக்கிவைத்தால் போட்டுச் சாப்பிட வருவார்கள்.
3 சத்திரத்திலே சாப்பாடு சாவடியிலே படுக்கை.
4 சத்திரத்துச் சாப்பாட்டுக்குத் தலத்து ஐயங்கார் அப்பனையோ?
5 சாப்பிடும் கலம் பொன்னானாலும் ஊறுகாய் கேளாமல் கடியுமா?
`
சாப்பாடு எனும் சொல் வழங்கும் முறை, நிலைகளை வைத்துப் பார்த்தால் இது ஒரு பிற்கால வழக்குச் சொல்லாகவும் இருக்கலாம்.
`
எது எப்படியிருந்தாலும் "சாப்பாடு" தமிழ்ச் சொல்லே.

உண்டியை, உணவை, அடிசிலைச் சோற்றை, அன்னத்தைப் பொங்கலைப் புளியோதரையை, இடியாப்பத்தை, இட்டலி தோசையைச் சாப்பாடு எனவும்,
சாப்பிடுங்கள் எனவும் தாராளமாகச் சொல்லலாம்.

Saturday, March 3, 2007

அடக்கம்

‘அடக்கம் அமருள் உய்க்கும்’ என்று, வள்ளுவம் கூறுகிறது. அடக்கம் மனிதனை உயர்த்தும். அடங்காவிட்டால் அடர்ந்த இருள் ஆழ்த்திவிடும். அடங்க அடங்க வாழ்வு உயரும். அடக்கத்தை அடைந்தவர்கள், வானோருடன் ஒப்பிட்டு கூறத்தக்க அளவுக்குப் புகழ் பெற்று உயர்வார்கள்.

ஆமையைப் போல அடக்கம் வேண்டும். ஆமையின் அடக்கத்தினை ஐந்தடக்கம் என்பர். மெய், வாய், கண், காது, மூக்கு ஆகிய புலன்கள் ஐந்தையும் அடக்கி வாழக் கற்றுக் கொண்டால் வாழ்நாள் முழுவதையும் அடக்கமே பாதுகாக்கும். புலன்களின் வழியில் மனம் போனால், புத்தியும் சத்தியும் கெடும். கண் பார்த்ததையும் காது கேட்டதையும் வாய் விரும்பியதையும் மூக்கு நுகர்ந்ததையும் மெய் விரும்பியதையும் அடைய வேண்டுமென்று மனம் அவாவினால், வாழ்க்கையில் துன்பத்தை விட வேறு ஒன்றும் இருக்காது. துன்பத்தைத் தொலைக்க வேண்டுமானால், புலன்களின் அவாவினைக் கட்டுக்குள் கொண்டு வரவே அடக்கம் வேண்டுமென்று கூறப்படுகிறது.

அடக்கத்தைக் கூறும் நூல்களாகிய பகவத் கீதை (2-58), மனு ஸ்மிருதி (பா-105), நாலாயிர திவ்விய பிரபந்தம் (2360) மகாபாரதம் போன்றவை அடக்கத்திற்கு உதாரணமாக ஆமையைக் கூறுகின்றன.

ஆமை, தன் அங்கங்களை ஓட்டுக்குள் இழுத்துக் கோவது போல, அடக்கத்தை மேற்கொள்வோர்கள் தங்கள் புலன்களை அடக்கி உள்ளே இழுத்துக் கொள்கிறார்கள். அதனால், அவர்கள் ஞானநிலை பெற்றதாகிறது என்று, விளக்கங்கள் கூறப்படுகின்றன.

ஆமையைப் போலப் புலன்களை உள்ளே இழுத்துக் கொண்டு அடக்கு! அடங்கு! என்று, திருமந்திரம் கூறவில்லை. அடக்கு என்னும் கருத்தையே திருமந்திரம் ஏற்கவில்லை. புலன்களை அடக்க முடியாது. அடக்குவதால் எந்த பயனையும் அடைய முடியாது. புலன்களோடு கூடியிருந்து அவை பெற்ற பயனை அடையவேண்டும் என்பது, திருமந்திரம் கூறும் தெளிந்த கருத்து.

“அஞ்சும் அடக்குஅடக்கு என்பார் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை
அஞ்சும் அடங்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவுஅறிந் தேனே”


என்பதால், உலக இன்பங்களை நெறிப்பட்ட முறையில் நுகர்ந்து கொண்டே பேரின்பம் பெற முடியும்! என்று, திருமந்திரம் கூறும் கருத்து எத்துணைப் பொருத்தமுடையது என்பதை உணரலாம்.

உலகிலேயே அதிக நாள் உயிர்வாழும் விலங்கு ஆமை ஒன்றுதான். ஆமை, அதிக நாள் வாழ்வதற்குக் காரணம் எதுவாக இருக்கும். ஆமை என்ன யோகநெறியா பயின்றிருக்கிறது! காய கல்பம் சாப்பிடுகின்றதா? பின்பு எப்படி அதனால் அதிக நாள் வாழ முடிகிறது? என்னும் ஆராய்ச்சியினால் கிடைத்த முடிபை உரைக்கிறது, திருமந்திரம்.

ஒரு நிமிடத்துக்கு 15 முறை சுவாசித்தால் ஆயுள்
100 ஆண்டாகும்.


ஒரு நிமிடத்துக்கு 18 முறை சுவாசித்தால் ஆயுள்
83⅓ ஆண்டாகும்.


ஒரு நிமிடத்துக்கு 2 முறை சுவாசித்தால் ஆயுள்
750 ஆண்டாகும்.


ஒரு நிமிடத்துக்கு 1 முறை சுவாசித்தால் ஆயுள்
1500 ஆண்டாகும்.


ஒரு நிமிடத்துக்கு 0 முறை சுவாசித்தால் மரணம் என்பதே இல்லை.


இவற்றுக்கும் ஆமைக்கும் என்ன தொடர்பு? என்றால், ஆமை ஒரு நிமிடத்துக்கு மூன்று முறை மட்டுமே சுவாசிக்கிறது.

ஆக, நீண்ட நாள் வாழ வேண்டுமானால், சுவாசத்தைக் கட்டுப் படுத்தும் மூச்சுப் பயிற்சியைச் செய்தோ மானல் நீண்ட நாள் வாழலாம்! என்பது, புலனாகிறது. பெரு மூச்சு விடாதீர்கள். அது ஆயுளைக் குறைக்கும்.