சாப்பாடு எனும் சொல் புதிராக இருக்கிறது.
`````````````````````````````````````````
இது தமிழ்ச் சொல்லா? பழந்தமிழ் இலக்கியத்தில் இச்சொல் இருக்கிறதா? எனப் பல கேள்விகளை ஒரே நேரத்தில் கேட்டார் ஒரு நண்பர்.
`
சாப்பாட்டுக்குத் தமிழில் உணவு, உண்டி, அடிசில் எனப் பல சொற்கள் இருக்கின்றன.
`
சாப்பாடு எனும் சொல்லுக்கு வேர்ச்சொல் விளக்கம், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் "முதல் தாய்மொழி" எனும் நூலில் ஒப்பொலிப்படலம் எனும் பகுதியில் பின் வருமாறு விளக்குகிறார்.
`
"இருதிணைப் பொருள்களும் இயற்கையாகவும் செயற்கையாகவும் பிறப்பிக்கும் ஒலிகளைப் போன்ற ஒலிக் குறிப்புகளும் அவற்றை அடிப்படையாகக் கொண்ட சொற்களும் ஒப்பொலிச் சொற்களாம். உயர்திணையொலிகள்.
`
எடுத்துக்காட்டு:
`
ஒலிக் குறிப்பு, சப்(பு). சொல் சப்பு - சப்பிடு - சாப்பிடு - (சாப்பீடு) சாப்பாடு."அவர் கூற்றை உறுதிப் படுத்துமாப் போல உண்ணல் ஐந்து வகை எனச் சொல்லும் சூடாமணி நிகண்டு,
`
"பல்லினால் கடித்தல் நக்கல் பருகல் விழுங்கல் மற்றும் மெல்லவே சுவைத்தலாகும் வினவில்ஐந் துணவு தாமே" எனும் செய்யுள் வழி உண்ணல் வகையில் கடித்துண்பது, நக்கியுண்பது, பருகியுண்பது, விழுங்கியுண்பது, சப்பியுண்பது என விளக்குகிறது.
`
சப்பிடு - சாப்பிடு - சாப்பாடு. மேற்காணும் விளக்கங்களைப் பின்வரும் அகரமுதலிகள் தரும் சொல் பொருள்களும் பிற செய்திகளும் பெரிதும் உறுதிப் படுத்துகின்றன.
`
அகரமுதலிப் பொருள்:
`
சப்புதல் - மெல்லுதல், குதப்புதல், உறிஞ்சிக் குடித்தல்.
`
சப்பிக் கொடுத்தல் - வாயிலிட்டுப் பதப்படுத்திக் குழந்தைக்குக் கொடுத்தல்.
`
சப்பெனல் - சாரமின்மைக் குறிப்பு, உப்பில்லாப் பண்டம் சப்பென்றிருக்கும்.
`
சப்புக் கொட்டுதல் - சாப்பிட்டபின் சுவையை நினைத்து நாக்கை மேல் அண்ணத்தோடு ஒட்டி ஒலி எழுப்புதல்.
`
உணவு உட்கொள்ளும் வகைகள் என்று இருபத்தைந்துக்கு மேற்பட்ட சொற்கள் தமிழில் உள்ளன எனக் குறிப்பிடும் திரு.இரா.வேங்கடகிருட்டிணன் (நூல்: தமிழே முதன்மொழி) தரும் குறிப்பில் "சப்புதல்" எனும் சொல்லையும் தருகிறார்.
`
மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் தம் "சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்" எனும் நூலில் உணவுண்ணுதற்கான 29 வகைச் சொற்களைத் தந்து பொருள் விளக்கமும் தருகின்றார்.
`
1. அசைத்தல் - விலங்குபோல் அசையிட்டடுத் தின்னுதல்
2. அதுக்குதல் - சூடான உணவை வாயின் இருபுறத்திலும் மாறிமாறி ஒதுக்குதல்
3. அரித்தல் - பூச்சி புழுப்போலச் சிறிது சிறிதாய்க் கடித்தல்
4. அருந்துதல் - சிறிது சிறிதாய்த் தின்னுதல் அல்லது குடித்தல்
5. ஆர்தல் - வயிறு நிரம்ப உண்ணுதல்
6. உண்ணுதல் - எதையும் உட்கொள்ளுதல்
7. உதப்புதல் (குதப்புதல்) - வாயினின்று வெளிவரும்படி மிகுதியாய்ச் சுவைத்தல்
8. உறிஞ்சுதல் - ஒன்றிலுள்ள நீரை வாயால் உள்ளிழுத்தல்
9. ஒதுக்குதல் - ஒரு கன்னத்தில் அடக்குதல்
10 கடித்தல் - கடினமானதைப் பல்லால் உடைத்தல்
11 கரும்புதல் - ஒரு பொருளின் ஓரத்தில் சிறிது சிறிதாய்க் கடித்தல்
12 கறித்தல் - மெல்லக் கடித்தல்
13 குடித்தல் - கலத்திலுள்ள நீரைப் பொதுவகையில் வாயிலிட்டு உட்கொள்ளுதல்
14 குதட்டுதல் - கால்நடைபோல் அசையிட்டு வாய்க்கு வெளியே தள்ளுதல்
15 கொறித்தல் - ஒவ்வொரு கூலமணியாய்ப் பல்லிடை வைத்து உமியைப் போக்குதல்
16 சப்புதல் - சவைத்து ஒன்றன் சாற்றை உட்கொள்ளுதல்
17 சவைத்தல் - வெற்றிலை புகையிலை முதலியவற்றை மெல்லுதல்
18 சாப்பிடுதல் - சோறுண்ணுதல்
19 சுவைத்தல் - ஒன்றன் சுவையை நுகர்தல்
20 சூப்புதல் - கடினமானதைச் சப்புதல்
21 தின்னுதல் - மென்று உட்கொள்ளுதல்
22 நக்குதல் - நாவினால் தொடுதல்
23 பருகுதல் - கையினால் ஆவலோடு அள்ளிக் குடித்தல்
24 மாந்துதல் - ஒரே விடுக்கில் அல்லது பெருமடக்காய்க் குடித்தல்
25 முக்குதல் அல்லது மொக்குதல் - வாய் நிறைய ஒன்றையிட்டுத் தின்னுதல்
26 மெல்லுதல் - பல்லால் அரைத்தல்
27 மேய்தல் - மேலாகப் புல்லைத் தின்னுதல்
28 விழுங்குதல் - மெல்லாமலும் பல்லிற் படாமலும் விரைந்து உட்கொள்ளுதல்
29 மிசைதல் - மிச்சில் உண்ணுதல்
`
நாம் பெருந் தீனிக்காரனைச் சாப்பாட்டு ராமன் என்று சொல்கிறோம்.
தெலுங்கு மொழியிலும் இது சாப்பாட்டு ராமுடு என வழங்குகிறதாம்.
`
தமிழில் நிலைமொழிக்கு முன்னால் ஒரு பிறமொழிச் சொல்லை வருமொழியாகக் கொண்டு புணரியல் விதிப்படி இணைக்கலாமா, முடியுமா? என்பதற்குக் காட்டுகள் தந்து விளக்கம் தரும் மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் சாப்பாடு என்பதைத் தமிழ்ச் சொல்லாகவே காட்டுகிறார்.
`
அவர் தந்த காட்டுகள்:
`
அவர் + ரவை வாங்கினார். சாப்பாடு + ரெடி.
`
புலவர் இரா.இளங்குமரன் தொகுத்த வழக்குச்சொல் அகராதியில் "சாப்பாடு போடல்" என்பதைப் பின்வருமாறு விளக்குகிறார்.
`
"நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் திருமண அகவை உடையவர்களெனின், என்ன, எப்பொழுது சாப்பாடு போட எண்ணம், போகிற போக்கைப் பார்த்தால் சாப்பாடு போடும் எண்ணமே இல்லையா? என வினவும் சாப்பாடு திருமணப் பொருட்டதாம்.
`
திருமணம் என்றாலே பலவகைக் கறிகள், பாயசம், அப்பளம், வடையுடன் சாப்பாட்டுச் சிறப்பே பெருஞ் சிறப்பாகப் பேசப்படுவதாகலின் சாப்பாடே திருமணப் பொருள் தருவதாயிற்று.
`
தாலிகட்டு முடிந்தால் இலை முன்னர்தான் பலரைப் பார்க்கலாம்.
`
அவ்வளவு பாடு, சாப்பாடு. பழந்தமிழ் இலக்கியத்தில் இந்தச் சொல் இருக்கிறதா?இருப்பதாகத் தெரியவில்லை.
`
என்றாலும் இக்கேள்வி தொடர்பாக இங்கே நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய செய்திகள்.
`
1. நம் இலக்கிய நூல்கள் அனைத்தும் இப்போது நம்மிடம் இல்லை.
`
"மறைந்து போன தமிழ் நூல்கள்" எனத் திரு. மயிலை சீனி வேங்கடசாமி 338 பக்கங்கள் கொண்ட ஓர் ஆய்வு நூலே எழுதியுள்ளார்.
அதில் 314 மறைந்து போன தமிழ் நூல்களின் விவரம் தருகிறார்.
சிதைவுண்ட நூல்களென மேலும் 319 நூல்களைக் குறிப்பிடுகிறார்.
`
2. இருக்கும் எல்லா நூல்களுக்கும் சொல்லடைவு தொகுக்கப்படவில்லை.
`
எனவே, பழந்தமிழ் இலக்கியத்தில் இருந்தால் தான் அது தமிழ்ச் சொல் என ஏற்றுக் கொள்ளலாம் என்பது முறையல்ல.
`
நாராயண பாரதியார் என்பார் எழுதி 1905ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட "திருவேங்கட சதகம்" எனும் நூலில், "நல்வண்ண மென்னிலொரு சாப்பாடு" என வரும் பாடலடியில் "சாப்பாடு" கிடைக்கிறது.
`
முக்கனியும் சர்க்கரையும் மொய்ம்மலர் போல் தோசைகளும் தக்க மிளகாய்ப் பொடியும் சட்டினியும் - பக்குவமாய்ச்சாப்பிடுங்கள் சாப்பிடுங்கள் என்று கிருஷ்ணசாமி தந்த காப்பிக்கும் உண்டோ கணக்கு எனத் தனிப்பாடல் திரட்டில் வரும் ஒரு வெண்பாவில் புலவர் வே.முத்துசாமி என்பார் சாப்பிடுங்கள், சாப்பிடுங்கள் என்கிறார்.
`
சாப்பாடு எனும் சொல் வழங்கும் சில பழமொழிகள்:
`
1 அன்று சாப்பிட்ட சாப்பாடு இன்னும் ஆறு மாதத்திற்குத் தாங்கும்.
2 கோட்டுச் சம்பா ஆக்கிவைத்தால் போட்டுச் சாப்பிட வருவார்கள்.
3 சத்திரத்திலே சாப்பாடு சாவடியிலே படுக்கை.
4 சத்திரத்துச் சாப்பாட்டுக்குத் தலத்து ஐயங்கார் அப்பனையோ?
5 சாப்பிடும் கலம் பொன்னானாலும் ஊறுகாய் கேளாமல் கடியுமா?
`
சாப்பாடு எனும் சொல் வழங்கும் முறை, நிலைகளை வைத்துப் பார்த்தால் இது ஒரு பிற்கால வழக்குச் சொல்லாகவும் இருக்கலாம்.
`
எது எப்படியிருந்தாலும் "சாப்பாடு" தமிழ்ச் சொல்லே.
உண்டியை, உணவை, அடிசிலைச் சோற்றை, அன்னத்தைப் பொங்கலைப் புளியோதரையை, இடியாப்பத்தை, இட்டலி தோசையைச் சாப்பாடு எனவும்,
சாப்பிடுங்கள் எனவும் தாராளமாகச் சொல்லலாம்.

1 comments:
அருமை
Post a Comment