Saturday, March 3, 2007

அடக்கம்

‘அடக்கம் அமருள் உய்க்கும்’ என்று, வள்ளுவம் கூறுகிறது. அடக்கம் மனிதனை உயர்த்தும். அடங்காவிட்டால் அடர்ந்த இருள் ஆழ்த்திவிடும். அடங்க அடங்க வாழ்வு உயரும். அடக்கத்தை அடைந்தவர்கள், வானோருடன் ஒப்பிட்டு கூறத்தக்க அளவுக்குப் புகழ் பெற்று உயர்வார்கள்.

ஆமையைப் போல அடக்கம் வேண்டும். ஆமையின் அடக்கத்தினை ஐந்தடக்கம் என்பர். மெய், வாய், கண், காது, மூக்கு ஆகிய புலன்கள் ஐந்தையும் அடக்கி வாழக் கற்றுக் கொண்டால் வாழ்நாள் முழுவதையும் அடக்கமே பாதுகாக்கும். புலன்களின் வழியில் மனம் போனால், புத்தியும் சத்தியும் கெடும். கண் பார்த்ததையும் காது கேட்டதையும் வாய் விரும்பியதையும் மூக்கு நுகர்ந்ததையும் மெய் விரும்பியதையும் அடைய வேண்டுமென்று மனம் அவாவினால், வாழ்க்கையில் துன்பத்தை விட வேறு ஒன்றும் இருக்காது. துன்பத்தைத் தொலைக்க வேண்டுமானால், புலன்களின் அவாவினைக் கட்டுக்குள் கொண்டு வரவே அடக்கம் வேண்டுமென்று கூறப்படுகிறது.

அடக்கத்தைக் கூறும் நூல்களாகிய பகவத் கீதை (2-58), மனு ஸ்மிருதி (பா-105), நாலாயிர திவ்விய பிரபந்தம் (2360) மகாபாரதம் போன்றவை அடக்கத்திற்கு உதாரணமாக ஆமையைக் கூறுகின்றன.

ஆமை, தன் அங்கங்களை ஓட்டுக்குள் இழுத்துக் கோவது போல, அடக்கத்தை மேற்கொள்வோர்கள் தங்கள் புலன்களை அடக்கி உள்ளே இழுத்துக் கொள்கிறார்கள். அதனால், அவர்கள் ஞானநிலை பெற்றதாகிறது என்று, விளக்கங்கள் கூறப்படுகின்றன.

ஆமையைப் போலப் புலன்களை உள்ளே இழுத்துக் கொண்டு அடக்கு! அடங்கு! என்று, திருமந்திரம் கூறவில்லை. அடக்கு என்னும் கருத்தையே திருமந்திரம் ஏற்கவில்லை. புலன்களை அடக்க முடியாது. அடக்குவதால் எந்த பயனையும் அடைய முடியாது. புலன்களோடு கூடியிருந்து அவை பெற்ற பயனை அடையவேண்டும் என்பது, திருமந்திரம் கூறும் தெளிந்த கருத்து.

“அஞ்சும் அடக்குஅடக்கு என்பார் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை
அஞ்சும் அடங்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவுஅறிந் தேனே”


என்பதால், உலக இன்பங்களை நெறிப்பட்ட முறையில் நுகர்ந்து கொண்டே பேரின்பம் பெற முடியும்! என்று, திருமந்திரம் கூறும் கருத்து எத்துணைப் பொருத்தமுடையது என்பதை உணரலாம்.

உலகிலேயே அதிக நாள் உயிர்வாழும் விலங்கு ஆமை ஒன்றுதான். ஆமை, அதிக நாள் வாழ்வதற்குக் காரணம் எதுவாக இருக்கும். ஆமை என்ன யோகநெறியா பயின்றிருக்கிறது! காய கல்பம் சாப்பிடுகின்றதா? பின்பு எப்படி அதனால் அதிக நாள் வாழ முடிகிறது? என்னும் ஆராய்ச்சியினால் கிடைத்த முடிபை உரைக்கிறது, திருமந்திரம்.

ஒரு நிமிடத்துக்கு 15 முறை சுவாசித்தால் ஆயுள்
100 ஆண்டாகும்.


ஒரு நிமிடத்துக்கு 18 முறை சுவாசித்தால் ஆயுள்
83⅓ ஆண்டாகும்.


ஒரு நிமிடத்துக்கு 2 முறை சுவாசித்தால் ஆயுள்
750 ஆண்டாகும்.


ஒரு நிமிடத்துக்கு 1 முறை சுவாசித்தால் ஆயுள்
1500 ஆண்டாகும்.


ஒரு நிமிடத்துக்கு 0 முறை சுவாசித்தால் மரணம் என்பதே இல்லை.


இவற்றுக்கும் ஆமைக்கும் என்ன தொடர்பு? என்றால், ஆமை ஒரு நிமிடத்துக்கு மூன்று முறை மட்டுமே சுவாசிக்கிறது.

ஆக, நீண்ட நாள் வாழ வேண்டுமானால், சுவாசத்தைக் கட்டுப் படுத்தும் மூச்சுப் பயிற்சியைச் செய்தோ மானல் நீண்ட நாள் வாழலாம்! என்பது, புலனாகிறது. பெரு மூச்சு விடாதீர்கள். அது ஆயுளைக் குறைக்கும்.

1 comments:

')) said...

அன்பு ஆசிரியரே !
வணக்கம் , அருமையான படைப்புகள்.
நான் தமிழை தமிழ் மொழியை நேசிக்கும் ஒரு இனியவன்
தமிழால் நான் வளர்ந்தவன்
தமிழ் என்னை வளர்த்ததால்
இன்று தமிழுக்காக நான்
பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவன்
இயந்திரவியல் துறையில் முது நிலை பட்டம் பெற்று தற்போது முனைவர் பட்டத்திற்கான முற்சியில் ஈடுபட்டு கொண்டிருப்பவன் .

அன்பானவன் இவன்
கந்தவேல்குமரன் ந
பேராசிரியர், அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரி
மனவிளை, வெள்ளிச்சந்தை ,
குமரி மாவட்டம் - 629203
கந்தவேல் கவிதைக்காக . . .